இயகோகா சுப்பிரமணியம்

வேர்த்திடு முடலில் வெள்ளம் திரட்டி
விளைச்சலை உழுதவன் மனிதன்!
ஆர்த்திடு மாயிரம் இயந்திரம் ஓட்டி
ஆலைகள் கண்டவன் மனிதன்!

தேர்த்தடம் கண்டால் ஊர்த்தடம் மறந்து
தெய்வம் தொழுதவன் மனிதன்!
கோர்த்திடும் பொன்மணி ஆரம் போலே
குடும்பம் அமைத்தவன் மனிதன்!
கார்த்தட வானம் கடலடி ஆழம்
ஞானம் கற்றவன் மனிதன்!
நீர்த்திடும் பழமையில் புதுமையைச் சேர்த்து
புரட்சிகள் செய்தவன் மனிதன்!
பார்த்ததும் மலர்ந்து பண்புடன் அழைத்து
விருந்திடும் தோழன் மனிதன்!
சேர்ந்திடும் சுற்றம் சோர்ந்திடும் வேளையில்
சாய்ந்திடும் ‘தோளன்’ மனிதன்!
இயலிசை நாடகம் அரசியல் ஊடகம்
எல்லைகள் வகுப்பவன் மனிதன்!
அயலிசைக் கலைகள் அனைத்தும் போற்றி
ஆழ்ந்து ரசிப்பவன் மனிதன்!