புருஷோத்தமன்

ஒரு விஷயம் கண்ணுக்குத் தெளிவாத் தெரியாத போது, பார்வையிலே இருக்கிறகுறைபாட்டுக்கு ஏற்றமாதிரி மூக்குக் கண்ணாடி போட்டக்கறோம். ரொம்ப ரொம்பச் சின்ன விஷயங்களை, பூதக்கண்ணாடி வைச்சுப் பார்க்கறோம். ஆனா, ஒவ்வொரு விஷயத்தையுமே பூதக்கண்ணாடியிலே பார்க்க ஆரம்பிச்சுட்டோம்னு வைச்சுக்கங்க! சின்ன விஷயத்தையும் பெரிசுபடுத்த ஆரம்பிச்சுட்டதா அர்த்தம்.

நான் பொதுவாச் சொல்றேன், ஒண்ணை அதே மாதிரி புரிஞ்சுக்கறதுக்கும் அதீதமாப் புரிஞ்சுக்கறதுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கு.

வாழ்க்கையிலே ஏற்படறபெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமே, மூக்குக் கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டிய விஷயத்தை பூதக்கண்ணாடி போட்டுப் பார்க்கறதுதான்.இப்ப, வீட்டிலேயே எடுத்துக்குவோமே! சாப்பிட உட்கார்றோம். குழம்பு, ரசம்னு போட்டு சாப்பிட்டுக்கிட்டே இருக்கோம். கடைசியிலே தயிர்சாதம் சாப்பிடறபோது ஒரு வாய் சாப்பாட்டிலே ஒரு சின்னக் கல் கிடக்கு. உடனே நாம என்ன செய்யறோம்?

என்ன இது! சாப்பாட்டிலே ஒரே கல்லாக் கிடக்கு அப்படீன்னு சத்தம் போட்டுத் தூக்கியடிச்சு ரகளை பண்றவங்க இருக்காங்க!நான் பொதுவாச் சொல்றேன். உண்மையிலேயே சாப்பாட்டிலே ஒரே கல்லாக் கிடக்கலை. ஒருவாய் கவளத்திலே ஒரு சின்னக் கல்லு மாட்டியிருக்கு. இதுக்கு சமைச்சவங்களோட கவனக்குறைவு மாத்திரம் காரணமில்லை. சாப்பிடறவங்க கவனக்குறைவும் காரணம். இல்லாட்டி தட்டிலே இருந்த கல்லு வாய் வரைக்கும் வந்திருக்காது.

எது எப்படி இருந்தாலும் ஒருவாய் கவளத்திலே கல் இருந்ததுங்கிறதுதான் யதார்த்தம். சாப்பாட்டிலே கல் கிடக்கறதா சொல்றது அதீதம். இந்த மாதிரிதான் ஒவ்வொரு சிக்கலையுமே அதனுடைய சுயமான அளவைக் காட்டிலும் அதிகமாகவே கற்பனை செய்துக்கறோம்.இதுக்கு என்ன தீர்வுன்னு பார்க்கலாம். ஆங்கிலத்தில் ஒண்ணு சொல்வாங்க. ஏதாவதொரு சிக்கல் ஏற்பட்டா, என்ன நடந்திருக்கு, என்ன நிலை ஏற்பட்டிருக்குன்னு ஆராய்ஞ்சு கணக்கெடுக்கறமுறைதான் அது.

இந்த அணுகுமுறைஇருந்தாலே பாதி பிரச்சினை முடிஞ்சுடும். என்ன நடந்தது அப்படீங்கிறதெளிவே அதுக்கான தீர்வை நோக்கி நம்மை நகர்த்தும். ஒரு விஷயம் நடந்ததை நம்மாலே ஏத்துக்க முடியாதபோது, ஒரு பதட்டம் உருவாகுது. அந்தப்பதட்டம், நடந்த விஷயத்தையே பெரிசு பண்ணிக் காட்டுது. ஒரு சின்ன விஷயத்தை நாட பெரிசா நினைக்கிறபோது, அந்த சிக்கல் தீர்க்க முடியாத அளவுக்குப் பெரிய விஷயம்னு நாமாகவே நம்பத் தொடங்கறோம்.

அதனாலே, ஒரு சம்பவம் நடந்ததுமே அதைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக்கறது நல்லது. அதன் விளைவா, பதட்டம் ஏற்படாம தடுக்க முடியுது.’பதறாத காரியம் சிதறாது’ அப்படீன்னு ஒரு பழமொழி இருக்கு.நான் பொதுவாச் சொல்றேன், ஒரு சிக்கலை சிரமமில்லாம தீர்க்கறதுக்கு சரியான வழி, அடுத்த கட்டம் என்னன்னு பார்த்து அதை நோக்கி நகர்ந்துடறதுதான்.

நடந்ததையே பேசிக்கிட்டிருக்கறதாலே நடக்கப் போறது ஒண்ணுமில்லை.ஒரு விஷயம் சட்டுன்னு முடிஞ்சு போகணும், ஜவ்வா இழுபடணுமாங்கறது நம்ம கையிலேதான் இருக்கு. நாம நினைச்சா சிரமமான சூழ்நிலையைக் கூட சுமூகமாக் கையாண்டுடலாம்.தெளிவான பார்வையே சரியாகக் காட்டும்சரியான அணுகுமுறைசிக்கல்கள் தீர்க்கும்.