– விழா அரங்கிலிருந்து பாணபத்திரன்

நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் பி.எஸ்.ஆர். சாரீஸ் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை தொடர் பயிலரங்குகளின் தொடக்க விழா கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.

விழாவில், நிர்வாக ஆசிரியர். கி. வேணுகோபால் வரவேற்புரை நிகழ்த்தினார். கணிசமான எண்ணிக்கையில நமது நம்பிக்கை வாசகர்கள் பெருகுவதற்குக் காத்திருந்தோம். அந்த இலக்கை எட்டியிருப்பதால் பயிலரங்குகள் தொடங்கியிருக்கிறோம்” என்றார் அவர்.

‘நமது நம்பிக்கை’ மாத இதழின் நிர்வாக ஆசிரியர் மரபின் மைந்தன். ம. முத்தையா தொடக்கவுரை நிகழ்த்தினார். “பதின் பருவத்தில் தங்கள் குழந்தைகள் வெற்றிப்பாதையில் நடையிட வேண்டுமென்று பெற்றோர் ஆசைப்படுகின்றனர். ஆனால், அதற்கான ஏற்பாடுகளைப் பிஞ்சு வயதிலேயே தொடங்க வேண்டும். வெறும் மதிப்பெண் இயந்திரங்களாகப் பிள்ளைகளை வளர்த்தால் ஆளுமை வளராது. சின்னஞ்சிறுவர்கள் மனதில் பெற்றோர் பற்றி நல்ல அபிப்பிராயங்கள் படிய வேண்டும். அது தான் பிற்காலத்தில் எதிரொலிக்கும்.

பலரும் தங்களுக்குள் இருக்கிறஆற்றலை அடையாளம் காணாமல், சராசரி மனிதர்களாகவே வாழ்கிறார்கள். வெற்றியை அளப்பதற்கும் சராசரி அளவுகோல்களையே வைத்திருக்கிறார்கள்.வெற்றிப் பாதையில் ஒரு சமூகம் நடந்து செல்ல வேண்டும். அந்தப் பயணத்தில் தனியாக நடந்து செல்வது மாதிரி சலிப்பூட்டுகிறவிஷயம் ஏதுமில்லை. எனவே அனைவருமாகக் கைகோர்த்து வெற்றிப்பாதையில் கூட்டுப்பயணம் மேற்கொள்வதே உடனடித் தேவை” என்று குறிப்பிட்டார்.விழாவில் சாந்தி ஆசிரம இயக்குநர் டாக்டர் வினு அறம் உரையாற்றினார். வெற்றி என்பது தனிமனித செயலாற்றலையும் உள்நிலையின் மேம்பாட்டையுமே குறிக்கும் என்றஅவர், தலாய்வாமாவுடன் செலவிட்ட நாட்களை நினைவு கூர்ந்து, அந்த சந்திப்பு தந்த உத்வேகம் அற்புதமானது என்றார்.

“வாரணாசியில் ஒரு மாலைப் பொழுதில், கங்கைக்கரையில் அமர்ந்திருந்தேன். எல்லோரும் கங்கையில் விளக்குவிட்டுக் கொண்டிருந்தார். “விளக்கு வாங்காமல் வந்து விட்டோமே” என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஓர் அழகிய சிறுமி படகை செலுத்திக் கொண்டு வந்தாள். என்னைப் பார்த்து, இந்தியில் அக்கா! விளக்கு விடுகிறீர்களா?” என்று கேட்டாள்.

அந்தச் சம்பவம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் பெண் கேட்டது, கங்கையில் விடுகிறவிளக்கை மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் வெளிச்சத்தைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்கிறசெய்தியாகவே அது அமைந்தது” என்றார் வினு.தலாய்லாமா, சர்வதேச அளவிலிருந்து பல்வேறு சமுதாயத் தலைவர்களை அழைத்து உலகளாவிய மாற்றங்கள் பற்றி கலந்து பேசுகிற அமர்வுகளை ஒருங்கிணைத்திருந்தார்.அப்போது தனி மேடை போட்டு அமர்ந்துகொள்வதற்கு பதிலாக அரங்குக்குக் கீழே வந்து அனைவருடனும் சேர்ந்து அமர்கிற முறையையே அவர் பெரிதும் விரும்பி வலியுறுத்தி வந்தார். அனைவரும் எத்தனையோ முயற்சிகளில் கைகோர்த்து, சேர்ந்து செயல்படவேண்டிய அவசியம் இருக்கிறது.தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்தினார் திரு. ஸ்டாலின் குணசேகரன். “வெற்றிப் பாதை என்பது நம்முடைய பயணத்திற்கும், நம் மூலமாக சமூகத்தின் வெற்றிப் பயணத்திற்கும் உதவ வேண்டும் என்றஅவர், அமெரிக்காவில் வாழும் தமிழர் ஒருவரின் கதையை பகிர்ந்து கொண்டார்.

சிரமப்பட்ட சூழலில் பிறந்து வளர்ந்து, தன் கல்வித் திறனால் முன்னேறி, அமெரிக்காவில் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவர், தான் ஈட்டிய பெரும் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு, நன்கு படிக்கக்கூடிய-மேல்படிப்புக்கு வசதியில்லாத1000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் விரும்புகிறதுறையில் படிக்க வைக்கிறார்” என்றார் அவர்.
தான் பெறுகிற வெற்றியைப் போலவே மற்றவர்களின் வெற்றியிலும் அக்கறைசெலுத்துபவனே சிறந்த வெற்றியாளன் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார்.
ஈரோட்டில் அவர் முன்னின்று நடத்துகிற மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஒரு கிராமத்தில் நூலகம் அமைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து சுவைபட விளக்கினார்.அரசாங்கத்தின் உதவி இல்லாமலேயே தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஐந்து சென்ட் நிலத்தில் தொடங்கி, கட்டிடம், நூலகத்திற்குத் தேவையான புத்தக அலமாரிகள், இருக்கைகள், மேசைகள் போன்ற அனைத்தையும் ஏற்படுத்தியதோடு இரண்டாயிரம் புத்தகங்களையும் அங்கே வைத்து தினந்தோறும் அந்த கிராமத்து மக்கள் நூலகத்தை நல்ல விதமாகப் பயன்படுத்திக்கொண்டு வருவதை உணர்ச்சியோடு விவரித்தார்.விழாவில் நமது நம்பிக்கை வாசகர் பெருமளவில் பங்கேற்றுப் பயடைந்தனர்.தனிமனித மேம்பாடு, தலைமைப் பண்பு, உரையாடல் கலை, சமூக நேயம் உள்ளிட்ட எத்தனையோ அம்சங்களை, உரிய வல்லுனர்களின் துணையோடு தொடர் பயிலரங்குகளாக வழங்க நமது நம்பிக்கை மாத இதழ், பி.எஸ்.ஆர். சாரீஸ் போன்ற சமூகப் பொறுப்பு மிக்க புரவலர்களின் துணையோடு தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
இந்தக் குறிக்கோளுக்கு, கால்கோள் விழாவாக அமைந்த எழுச்சி மிக்க நிகழ்ச்சிதான் வெற்றிப்பாதை தொடர் பயிலரங்குகளின் தொடக்கவிழா.

(விழா அரங்கிலிருந்து பாணபத்திரன்)